இந்தியாவின் தோல்வி உறுதி - 166 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்தது
[
]
27 Jan 2012
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடி லெய்ட்டில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 604 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் கிளார்க், முன்னாள் கேப்டன் பாண்டிங் இரட்டை சதம் அடித்தனர்.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 272 ரன்னில் சுருண்டது. வீராட்கோலி சதம் (116 ரன்) அடித்தார். சிடில் 5 விக்கெட் கைப்பற்றினார். ஆஸ்திரேலிய அணி பாலோஆன் கொடுக்காமல் 2-வது இன்னிங்சை விளையாடியது. நேற்யை 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 50 ரன் எடுத்து இருந்தது.
இன்று (வெள்ளிக்கிழமை) 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 382 ரன்கள் முன்னிலையில் கைவசம் 7 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடியது. பாண்டிங்-கிளார்க் ஜோடியை உமேஷ்யாதவ் பிரித்தார்.
கிளார்க் 37 ரன்னில் அவரது பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மைக்ஹஸ்சி 15 ரன்னில் இஷாந்த்சர்மா பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். மறுமுனையில் இருந்த பாண்டிங் சிறப்பாக விளையாடி அரை சதத்தை தொட்டார். மதிய உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்து இருந்தது.
மதிய உணவு இடை வேளைக்கு 3 ஓவர் ஆடியபிறகு ஆஸ்திரேலியா ஆட்டத்தை முடித்து கொள்வதாக அறிவித்தது. 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்திருந்தபோது அந்த அணி டிக்ளேர் செய்தது. பாண்டிங் 60 ரன்னிலும், ஹாடின் 11 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் பெற்ற கூடுதல் 332 ரன் மூலம் இந்தியாவுக்கு 500 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
500 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. வழக்கம்போல் இந்தியாவின் தொடக்கம் அதிர்ச்சியாக இருந்தது.
சச்சின் 13 ரன்களிலும், திராவிட் 25 ரன்களிலும், லஷ்மன் 35 ரன்களிலும், கோலி 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தற்போது இஷாந்த் ஷர்மா, சஹா ஆகியோர் இணை சேர்ந்துள்ளனர். 4வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை எடுத்துள்ளது.
இது 4வது டெஸ்ட் போட்டியும் ஆஸ்ட்ரேலியாவின் வெற்றிப் பாதையை நோக்கி வேகமாக நகருவதைக் காட்டுகிறது. 4 போட்டித் தொடர்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஏற்கனவே 3 போட்டிகளை வென்று தொடரைக் கைப்பற்றிவிட்ட ஆஸ்ட்ரேலியா 4-0 என்ற வெற்றி கணக்கில் கோப்பையை பெற எண்ணியுள்ளது.
ஆஸ்ட்ரேலிய மண்ணில் சச்சின் 100வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்வார் என்ற ரசிகர்களின் கனவு தகர்ந்தது.