அரசியலிலிருந்து ஓய்வு பெற ஹிலாரி கிளிண்டன் முடிவு

27 Jan 2012

தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா வெற்றி பெற்றாலும் தான் அரசியலில் நீடிக்க விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


வெளியுறவு அமைச்சகத்தில் உள்ள நெருங்கிய நண்பர்களிடம் அவர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இரண்டாவது முறையாக வெளியுறவு அமைச்சர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்றும் தனக்குப் பதிலாக வெளியுறவு அமைச்சராக மற்றொருவரை ஒபாமா நியமிக்கும் வரை இப்பதவியில் இருக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர அரசியலில் இருந்துவிட்டதால், போதும் என்ற மன நிலைக்கு வந்துவிட்டதாகவும், தனக்கு ஓய்வு தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து இதேபோன்று அதி முக்கியத்துவம் வாய்ந்த பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

1993-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை பில் கிளிண்டன் அதிபராக இருந்தபோது அமெரிக்காவின் முதல் பெண்மணியாக ஹிலாரி வலம் வந்தார். 2001-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை நியூயார்க்கின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அதிபர் தேர்தலில் கட்சி சார்பில் ஹிலாரி, ஒபாமா போட்டியிட்டனர். கடைசி நேரத்தில் ஒபாமாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து ஒபாமா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது.

வெளியுறவுத்துறை அமைச்சராக இருப்பவர் தேர்தலில் பங்கேற்கக் கூடாது. அத்துடன் சமீப காலமாக தேர்தல் சார்ந்த விவாதக் கூட்டங்களிலும் ஹிலாரி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Ads
Latest Videos