புதையல் எடுக்கும் ஆசையில் பக்கத்து வீட்டுக்காரரின் 14 வயது சிறுவனை நரபலி கொடுத்தவர் கைது
27 Jan 2012
ஆந்திராவில் புதையல் எடுக்கும் ஆசையில் சிறுவனை பலி கொடுத்த பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திராவின் அடிலாபாத் மாவட்டம் நிர்மல் நகரை சேர்ந்த தையல்காரர் நரசய்யா. இவரது மகன் கணேஷ் 14. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கணேஷ் கடந்த 24ம்தேதி பள்ளிக்கு சென்ற பின் வீடு திரும்பவில்லை. இது குறித்து நரசய்யா போலீசில் புகார் செய்தார்.
நரசய்யாவின் பக்கத்து வீட்டுக்காரர் ரதோர் ராஜு. நிர்மல் நகர எல்லையில் பாழடைந்த கோட்டை ஒன்று உள்ளது. இந்த கோட்டையில் புதையல் இருப்பதாக அப்பகுதி மக்களிடையே கருத்து நிலவியது. இந்த புதையலை எடுக்க திட்டமிட்டார் ரதோர் ராஜு. இதற்காக ஒரு சாமியாரிடம் ஆலோசனை கேட்டார்.
சிறுவனை பலி கொடுத்து கோட்டையில் அந்த ரத்தத்தை தெளித்தால் புதையல் இருக்கும் இடம் தெரியும் என சாமியார் சொன்னதால் கணேசை நைசாக அழைத்துச் சென்ற ரதோர் கோட்டையில் அவனது கழுத்தை அறுத்து பலி கொடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு பேருக்கு தொடர்புள்ளது. போலீசார் ரதோரை கைது செய்துள்ளனர். கோட்டையில் புதைக்கப்பட்ட கணேஷின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.